உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவமும், வைணவமும் இணைந்த திருப்பூர்

சைவமும், வைணவமும் இணைந்த திருப்பூர்

திருப்பூர் நகருக்கு எழில் சேர்க்கும் வகையில், நகரின் மத்தியில் அமைந்துள்ளன, ஸ்ரீவிசாலாட்சி உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில். ஹரியும், சிவனும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில், இக்கோவில்களில் நடத்தப்படும் தேர்த்திருவிழா, சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்கள், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை; சைவமும், வைணவமும் இணைந்த கோவிலாக இருப்பதோடு, இக்கோவில்களில், ஆண்டு தேர்த்திருவிழாவும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது, மிகவும் சிறப்புக்குரியது; அரிதான ஒன்றாகவும் கருதப்படுகிறது.

கோவில் பராமரிப்பு, ஊழியத்துக்கு என, தானமாக வழங்கப்பட்ட, 600க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம், இரு கோவில்களுக்குமே பொதுவானது. வைகாசி விசாகத்தின்போது, 13 நாட்களுக்கு, தேர்த்திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளில், திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் இருந்து, கிராம சாந்தி, அம்மன் வீதி <உலா நடைபெறும். இரு கோவில்களிலும், அடுத்தடுத்து கொடியேற்றம் நடக்கும். திருவிழா நாட்களில், ஸ்ரீவீரராகவப் பெருமாளும், விஸ்வேஸ்வரரும் ஒன்றாக, தேரோடும் வீதிகளில், அதிகார நந்தி, சேஷ வாகனம், கற்பக விருட்ஷம், கருட சேவை என, எழுந்தருள்கின்றனர். ஸ்ரீவீரராகவப் பெருமாள், விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு வருவார். விஸ்வேஸ்வரரை அழைத்துக் கொண்டு, இருவரும் வீதி <உலா செல்வர்; நிறைவடைந்ததும், விஸ்வேஸ்வரை இங்கு வந்து விட்டு, வீரராகவப் பெருமாள் தன் இருப்பிடத்துக்கு திரும்புவார். வைகாசி விசாக தேர்த்திருவிழாவில், விசாகம் நட்சத்திர நன்னாளில் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டமும், மறுநாள், அனுஷம் நட்சத்திரத்தில் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். இரு சுவாமிகளுக்கும், ஒரே மாதிரியான தேர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரு கோவில்களுக்கும், ஒரே தேர்நிலை உள்ளது.இரண்டு கோவில்களுக்கும் பொதுவாக, ஒரே தெப்பக்குளம் இருந்துள்ளது. தற்போதுள்ள பூ மார்க்கெட் பகுதியே குளமாகும். தேர்த்திருவிழாவில் நடக்கும் தெப்போற்சவத்தில், இரண்டு சுவாமி களும், ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கியது, மிகவும் விசேஷமானது. பின்னாளில் குளம் அழிந்து, இரு கோவில்களிலும், தனித்தனியே தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. சைவமும், வைணவமும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில், நமது விஸ்வேஸ்வரர் கோவிலும், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலும் திகழ்வது வணங்குதலுக்குரியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !