பழநி சிவன் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு
பழநி : மகா சிவராத்திரியை முன்னிட்டு பழநி பெரியாவுடையார் கோயில், பெரியநாயகியம்மன்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்கள் சிறப்பு பூஜைகள், குலதெய்வ வழிபாடு நடந்தது. நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பழநி, கீரனூர், தொப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி பகுதிகளில் உள்ள சிவன்கோயில்கள், குலதெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைகள் நடந்தது. கோவை ஈஷா யோகா மையம் சார்பில் சிவராத்திரியை முன்னிட்டு அக்ஷயா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் இரவு முழுவதும் இன்னிசை, சத்சங்கம் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தது. இடும்பன் மலை அருகேயுள்ள பஞ்சமுக பிரபஞ்சநாதர், வில்வக்குடில் கோயிலில் கணபதி ஹோமம், ருத்ர யாகம், இரவு 7 மணிக்கு உமா மகேஷ்வர பூஜை, இரவு 12 மணி, உச்சிகாலபூஜை அன்னதானம் வழங்கப்பட்டது. பழநி பெரியாவுடையார் கோயில், மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, புதுநகர் சிவன்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கோதைமங்கலம் மானூர் சுவாமிகள் ஆலயம், ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில் போன்ற இடங்களில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 12 மணிக்குமேல் உச்சிகாலபூஜை, அர்த்தஜாம பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்றனர்.