அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் சூறையிடுதல் விழா
காஞ்சிபுரம் : நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று காலை மயான பிரவேசம் மற்றும் சூறையிடுதல் விழா நடைபெறுகிறது. நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் சிறப்பு பெற்று விளங்கும் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா, மறுநாள் சூறையிடுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை கோமாதா பூஜையுடன் விழா துவங்கியது; தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு, நந்தீஸ்வரர் கோவில் குளக்கரையில் இருந்து கங்கை திரட்டுதல் நடந்தது. நேற்று காலை, சிறப்பு ஆராதனை, நித்திய பூஜை, மருளானருக்கு அலகு போடுதல் மற்றும் மாலை, 5:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது.இன்று காலை, 10:00 மணிக்கு மயான பிரவேஷம் மற்றும் சூறையிடுதலும், மதியம், 2:00 மணிக்கு மங்கையர்கரசியின் சொற்பொழிவு, மாலை, 6:00 மணிக்கு கும்பம் களைதல், இரவு, 8:00 மணிக்கு அம்மன் வீதிவுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் ராமசந்திரன் செய்துள்ளார்.