தவறு செய்யும் பக்தர்களைப் பற்றி இறைவன் என்ன நினைப்பார்?
பக்தர்கள் மீது இறைவன் கொண்டிருக்கும் தயையும் கருணையும் எல்லையற்றவை. தவறு செய்யும் பக்தர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தி ஆட்கொள்ளவே இறைவன் விரும்புகிறான். சந்திரன், ராவணன் ஆகியவர்கள் செய்த பெரும் பிழையையும் மன்னித்து சிவபெருமான் அருள்புரிந்தார். ஸ்ரீராமர், காகாசுரன் செய்த பெரும்பிழையையும் மன்னித்து அருள் புரிந்தார். மனத்தூய்மையின்றிச் செய்யப்படும் பக்தி உரிய பலனை, உயர்ந்த பலனைத் தருவதில்லை. உள்ளத்தில் காமம், கோபம், பொறாமை, கள்ளம், கபடு போன்ற மாசுகளை வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்க்க மாட்டான். மனிதன் மனம் திருந்தித் தூய வாழ்க்கையும், தியான வாழ்க்கையும் மேற்கொண்டால் வீடுபேறு அடைய முடியும். பழிக்குப் பழி வாங்கத் துடிப்பது ஆன்மிகமல்ல; பிறர் குற்றத்தை மன்னிப்பதுதான் ஆன்மீகம். நாமும் நமக்குத் தீமை செய்தவர்களை மன்னித்து நன்மை செய்து வாழ வேண்டும். பிறர் குற்றத்தை மன்னித்து வாழ்பவன் மகிழ்ச்சியோடும், மனஅமைதியோடும் வாழ்வான்.