சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா: படி இறங்கிய சுவாமியை கண்டு பக்தர்கள் பரவசம்
தஞ்சாவூர்: முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கந்த சஷ்டி விழாவையொட்டி, நேற்று (நவ.9ம் தேதி) விக்னேஸ்வர பூஜையும், இன்று (நவ.10ம் தேதி) கந்த சஷ்டி விழாவின் தொடக்கமாக காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் வள்ளி, தேவசேனா உடனாய சண்முக சுவாமி, சந்திரசேகரர், வீரபாகு, வீரகேசரி ஆகியோர் மலைக் கோவிலில் இருந்து படியிறங்குதலும், உற்சவ மண்டபம் எழுந்தருளலும் நடைபெற்றது. அப்போது சுவாமிகளுக்கு சிறப்பலங்காரம் செய்விக்கப்பட்டு, மலர்கள் தூவியபடி, அரோகரா அரோகரா என முருக பக்தர்கள் முழக்கத்துடன் விமரிசையாக சுவாமிகள் படி இறங்கினர். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர். நாளை (நவ.11ம் தேதி) முதல் 20-ம் தேதி வரை சுவாமிகள் படிச்சட்டத்தில் வீதியுலா,ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நவ.15-ம் தேதி 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு சண்முக சுவாமி அம்மனிடம் சக்தி வேல் வாங்குதல், நவவீரர்கள் வேட மிட்டு சூரசம்ஹாரம், தங்கமயில் வாகனத்தில் வீதியுலா ஆகியன நடைபெறும். நவ.16-ம் தேதி முற்பகல் 11 மணிக்கு காவிரியில் தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தேவசேனா திருக் கல்யாணம், 19-ம் தேதி வள்ளி-தேவசேனா-சண்முகர் சுவாமிதிருக் கல்யாணம், 20-ம் தேதி சுவாமிகள் யதாஸ்தானம் சேருதல் ஆகியன நடைபெற உள்ளன.