பராமரிப்பின்றி பாழடைந்து வரும் பழமை வாய்ந்த சிவன் கோயில் !
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானுர் தாலுக்காவில் உள்ளது எறையுர் கிராமம் பிரசித்தி பெற்ற திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது இந்த கிராமம். இங்கு பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று பராமரிப்பின்றி உள்ளது.
ஊரின் விவசாய நிலப்பகுதியில் பல ஆண்டுகளாக புதர் மண்டி தெரியாமல் இருந்த இந்த கோயில் கிராமத்து இளைஞர்கள் முயற்ச்சியால் புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கிருந்த லிங்கத்தை மீட்டு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இக்கோயில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கோயில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. இந்த தகவலை விழுப்புரம் கல்வெட்டு களப்பணியாளர்கள் வீரராகவன்,மங்கையர்கரசி ஆகியோர் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர்.
இந்த கல்வெட்டு மங்கல சொல்லுடன் ஸ்ரீவஸ்தி ஆரம்பமாகிறது. இது 3 புவனத்திற்கும் சக்கரவத்தியான வீரபாண்டிய தேவரின் கி.பி.1345 ஆட்சியாண்டு கல்வெட்டு என அறியப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள இறைவன் தவநெறி ஆளுடைய நாயனார் என்றும் இந்த ஊர் இளநல்லூர் என்றும் இந்த கல்வெட்டு சொல்கிறது. அன்றைய இளநல்லூர் இன்று எறையுர் என அழைக்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயிலை பக்தர்கள் வழிபட அரசு மற்றும் ஆன்மீக அன்பர்கள் ஒன்று சேர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கருத்தாகும்.
தொடர்புக்கு: 9787744272.