சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயிலில் 1ம் தேதி பெருங்கொடை விழா துவக்கம்
வள்ளியூர் : சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயிலில் வரும் 1ம் தேதி ஆவணி பெருங்கொடை விழா துவங்குகிறது. சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோயிலில் ஆவணி பெருங்கொடை விழா வரும் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக 1ம் தேதி மாலை 4 மணிக்கு கும்பாபிஷேக சிறப்பு பூஜை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை உவரி சுயம்புலிங்கசுவாமி அண்ணாமலை குருக்கள் நடத்துகிறார். இரவு 9 மணிக்கு அம்பாசமுத்திரம் மணி முருகனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வரும் 2ம் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு பால் அபிஷேக பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி மயானம் செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சாமபடைப்பு பூஜையும் நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சியாக காமராஜர் கலையரங்கத்தில் இரவு 8 மணிக்கு திரைப்பட இன்னிசை கச்சேரியும், இரவு 11 மணிக்கு "குடும்ப மேம்பாட்டிற்கு காரணம் கணவனின் நிதியா, மனைவியின் மதியா என்ற இசை பட்டிமன்றம் நடக்கிறது. சுடலை ஆண்டவர் கலையரங்கில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து திரைப்பட இன்னிசைக்கச்சேரியும் நடக்கிறது. மூன்றாம் நாள் காலையில் சுவாமி வீதியுலாவும், பொங்கல் பூஜையும் நடக்கிறது. முன்னதாக கொடைவிழாவிற்கான கால்நாட்டு விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை சிறுமளஞ்சி இந்து நாடார் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.