கரூரில் உறியடி திருவிழா கோலாகலம்
கரூர்: கரூர் சீனிவாசபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 90ம் ஆண்டு உறியடி விழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் கரூர் பண்டரி நாதன் கோவில் முன்புறம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நடப்பாண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பண்டரி நாதனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு கோவில் முன் நடந்த உறியடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 8 மணிக்கு வழுக்கு மரம் நிகழ்ச்சியில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றனர். சிறப்பு பூஜைக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உறியடி விழா கமிட்டி கௌரவ தலைவர் பழனியப்பன், விழாக்குழு தலைவர் ராஜசேகர், தலைவர் சந்தான கிருஷ்ணன், துணை தலைவர் சிவசங்கர், செயலாளர் பாலாஜி, பொருளாளர் மோகன்ராம் உள்பட பலர் பங்கேற்றனர்.