கண்ணகி கோயிலில் மாதந்தோறும் விழா: பக்தி சேவா சமிதி வலியுறுத்தல்
தேனி : ""தமிழக-கேரள மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த கண்ணகி கோயிலுக்கு மாதந்தோறும் விழா நடத்த இரு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மங்கல தேவி கண்ணகி பக்தி சேவா சமிதி அமைப்பினர் வலியுறுத்தினர்.
தேனியில், கேரளாவை சேர்ந்த அதன் மாநில செயலாளர் பிஜூ கூறியதாவது: தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையில் கண்ணகி கோயில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி அன்று ஒரு நாள் மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகிறது. மற்ற நாட்களின் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் இரு மாநில மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் கண்ணகி கோயிலுக்கு செல்ல அனுமதித்து விழா நடத்த வேண்டும். சித்ரா பவுர்ணமியில் 5 நாட்கள் விழா கொண்டாட வேண்டும். கூடலூர்-பளியன்குடி ரோட்டில் ( ஆறரை கி.மீ., தூரம் ) பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும். கேரளா-தேக்கடி ஜீப் ரோடு பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்ணகி கோயில் இதுவரை சீரமைக்கப்படவில்லை. சபரிமலை ஐயப்பன் கோயில் போல, கண்ணகி கோயிலும் வனத்தில் அமைந்துள்ளது. எனவே, இரு மாநில அரசின் ஒத்துழைப்போடு கண்ணகி கோயிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில், தேனி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., பொன்னம்மாளிடம் மனு கொடுத்தோம். நாளை (மார்ச்19) இடுக்கி கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். பெரியாறு அணை பிரச்னை விஷயத்தில் இரு மாநில மக்களும் வேறுபட்டு நிற்கின்றனர். இதை தவிர்க்க இதுபோன்ற விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். மார்ச் 24ல் கம்பத்தில் இரு மாநில மக்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடக்கவுள்ளது, என்றார். சமுதாய நல்லிணக்க பேரவை தேனி மாவட்ட அமைப்பாளர் சரவணன், கேரளாவை சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் திவாகரன், பிரதீப் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.