லாஸ்பேட்டை மைதானத்தில் 27ம் தேதி ஸ்ரீவாரி திருக்கல்யாணம்
புதுச்சேரி: லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம் வரும் 27 ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது: ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணைந்து புதுச்சேரியில் 4வது ஆண்டாக வரும் 27 ம் தேதி மாலை 4 மணிக்கு லாஸ்பேட்டை ஹெலிப்பேட் மைதானத்தில் திருக்கல்யாண உற்சவம் நடத்துகின்றன.இதற்காக திருப்பதியிலிருந்து சுவாமி புறப்பட்டு 26ம் தேதி இரவு லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் வந்து தங்குகிறார். ௨௭ம் தேதி காலை திருப்பதியில் நடப்பது போன்று சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை நடக்கிறது. பொதுமக்கள் சீனுவாச பெருமாளை பள்ளியில் தரிசிக்கலாம்.அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஹெலிப்பேட் மைதானத்தில் ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை ௬ மணி முதல் இரவு ௮ மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.வெளியூர் பக்தர்கள் வசதிக்காக புதுச்சேரி பஸ்நிலையத்தில் இருந்து லாஸ்பேட்டைக்கு ௨௦ இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.