சிவாயநம ஓம் கோஷம் முழங்க.. பட்டீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்!
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தேரோட்ட விழா நேற்று பக்தி பரவசத்துடன் நடந்தது. சிவாயநம ஓம் கோஷத்துக்கு இடையே, பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.
மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும், பேரூர் பட்டீசுவரர் கோவில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, மார்ச் 14ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 16ல் யாகசாலை பூஜைகளும், இரவு 8:00 மணிக்கு சூரியபிரபை, சந்திரபிரபை திருவீதி உலாவும் நடந்தது.மார்ச், 17ல், காமதேனு, 18ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சியளித்தனர். நேற்று முன் தினம் இரவு சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவமும், வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்.கோ பூஜை, கஜபூஜை, காலசந்தி பூஜைகளுக்கு பின்பு, பஞ்சமூர்த்திகளுக்கு, 15 வகை திரவிய அபிஷேகமும், ரிஷபயாகமும் நடந்தது. இதையடுத்து, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு திருக் கல்யாண வைபவம் நடந்தது.பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், நடராஜர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளுவிக்கப்பட்டனர்.
தேரில் வீற்றிருந்த சுவாமியை வழிபாடு செய்ய, மதியம் வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி மாலை 3:00 மணிக்கு நடந்தது. இதில், பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், பிள்ளையார்பீடம் பொன்மணிவாசக சுவாமிகள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் புடை சூழ, சிவாயநம ஓம், பட்டீசா கோஷங்கள் முழங்க தேர் மெல்ல, தேர்நிலையை விட்டு நகர்ந்து, கோவில் வாசலை அடைந்தது. அங்கிருந்து கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது.பட்டீஸ்வரர், அம்மன், விநாயகர், முருகர், நடராஜர் ஆகியோர் தனித்தனி தேரில் கோவிலை சுற்றி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேர்செல்லும் பாதை குளிர்ச்சியாக இருக்க, வழிநெடுக தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.தீயணைப்புத்துறை வாகனங்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோவையிலிருந்து சிறுவாணி வரை செல்லும் பஸ்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் நேற்று இயக்கப்பட்டன.