உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டியர் காலத்து கோவில்: பராமரிக்க நடவடிக்கை தேவை

பாண்டியர் காலத்து கோவில்: பராமரிக்க நடவடிக்கை தேவை

தலைவாசல்: தலைவாசல் அருகே, பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட நயின நாராயண பெருமாள் கோவிலை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தலைவாசல் ஒன்றியத்தில் உள்ள நாவக்குறிச்சி கிராமத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது நயின நாராயண பெருமாள் கோவில். பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில், 1,400 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. இன்று எவ்வித பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. கோவிலின் தேர் இடிந்துள்ளதுடன், நித்திய பூஜைகள் கூட நடப்பது இல்லை. சன்னிதானத்தின் மேல் தளத்தில், பாண்டியர்களின் சின்னமாகிய மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புராதன சின்னங்கள் சரிவர பாதுகாக்கப்படாததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவிலுக்கு, மானியங்கள் இருந்தும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. கோவிலில் பூஜைகள் செய்ய குருக்கள் கூட இல்லை. பாண்டியர் காலத்து பழமை வாய்ந்த கோவிலை பராமரித்து, அனைத்து கோவில்கள் போலவே வழிபாடுகள் நடத்த ஆவன செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அவ்வூரில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் கூறுகையில், இந்த கோவிலை கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். முறைப்படி, இந்த கோவிலுக்கென்று, குருக்களை அமர்த்த வேண்டும். உள்ளே கோவில் வளாகத்தை சுற்றிலும் செடி, புதர்கள் வளர்ந்துள்ளது. இதை அகற்றி சுத்தம் செய்வதுடன், பாண்டியர் காலத்திய சின்னங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !