உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் குருத்தோலை ஞாயிறு பவனி

திருப்பூரில் குருத்தோலை ஞாயிறு பவனி

திருப்பூர்: குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு, திருப்பூரில், கிறிஸ்தவர்கள் பாடல் பாடியபடி, ஊர்வலம் சென்றனர். குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன் மற்றும் புனித வெள்ளி ஆகிய நாட்களை, கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் இறுதியாக, புனித வாரம் நேற்று துவங்கி, 26 வரை கடைபிடிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்ரீன் தேவாலயத்தில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது; ஏராளமான கிறிஸ்தவர்கள், கைகளில் குருத்தோலை ஏந்திபடி, ஊர்வலமாக சென்று, பங்கேற்றனர். தேவாலயத்தில் துவங்கிய ஊர்வலம், பார்க் ரோடு, காதர்பேட்டை, டவுன்ஹால் வழியாக, மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. அதன்பின், பொது மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல், அவிநாசி ரோடு, கோர்ட் வீதி உள்ளிட்ட, நகரில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு தினத்தை ஒட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அவிநாசியில் உ ள்ள சி.எஸ்.ஐ., இம்மானுவேல் தேவாலயம் சார்பில், குருத்தோலை ஞாயிறு தினம், நேற்று கொண்டாடப்பட்டது; மேற்கு ரத வீதியில் துவங்கிய ஊர்வலம், மெயின் ரோடு, கிழக்கு, வடக்கு ரத வீதி, கச்சேரி வீதி வழியாக, சி.எஸ்.ஐ., ஆலயத்தை அடைந்தது. ஊர்வலத்தை, ஆயர் எட்வின் ராஜ்குமாரும், சிறப்பு பிரார்த்தனையை, ஆயர் ரூபன் சாமுவேலும் துவக்கி வைத்தனர். திருப்பலியில் பக்தர்கள் பங்கேற்று, ஆராதனை பாடல் பாடினர். அவிநாசி, பழங்கரை, கருவலூர், கணியாம்பூண்டி, துலுக்கமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !