உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திர விழாவில் பறவைக்காவடி பக்தர்கள்!

பங்குனி உத்திர விழாவில் பறவைக்காவடி பக்தர்கள்!

பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள்பறவைக்காவடி, தீர்த்தக் காவடிகளுடன் குவிந்தனர். பழநி பங்குனி உத்திர விழா மூன்றாம் படை வீடு திரு ஆவினன்குடி கோயிலில் மார்ச் 17ல் துவங்கி 10 நாட்களாக நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருஆவினன்குடி கோயிலில் எழுந்தருளி தங்கமயில், யானை போன்ற வாகனங்களில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 22ல் திருக்கல்யாணம், மார்ச் 23ல் தேரோட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.பங்குனி உத்திர விழா முடிய உள்ளதால் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஈரோடு, காங்கேயம், சேலம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடங்கள், மயில்காவடிகள் எடுத்துவந்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று இரவு 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் சன்னதிவீதி உலா வருகிறார். அதன்பின் திருஆவினன்குடியில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு மேல் முத்துகுமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் பெரியநாயகியம்மன் கோயிலுக்கு திரும்பிய உடன் விழா முடிவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !