உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை சர்ச்சுகளில் புனித வெள்ளி அனுசரிப்பு

கோவை சர்ச்சுகளில் புனித வெள்ளி அனுசரிப்பு

கோவை: இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த நிகழ்வினை நினைவுகூர்ந்து உலகமெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக நேற்று சர்ச்சுகளில் அனுசரித்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேல் நாட்டில் ’பஸ்கா’ எனும் பண்டிகையை கொண்டாட, எருசலேம் நகருக்கு 12 சீடர்களுடன் இயேசு வந்தார். பஸ்கா பண்டிகையை முடித்து, கெத்சமனே எனும் தோட்டத்தில் சீடர்களுடன் இரவு ஜெபித்து கொண்டிருந்தபோது, யூதாஸ்காரியோத் என்ற சீடன்- ரோம போர்சேவகர்கள், ஆலய குருக்கள், ஜனத்தின் பெரியோர்களிடம், 30 வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிகொடுத்தான். இந்நிகழ்வு பெரிய வியாழனாக கருதப்படுகிறது.அன்று இரவு முழுவதும் இயேசு, ரோம அதிகாரிகளால் நியாயம் விசாரிக்கப்பட்டதில், குற்றமற்றவராக காணப்பட்டாலும், ஆலய குருக்கள் இயேசுவுக்கு எதிராக பல பொய் குற்றங்களை சுமத்தி, சிலுவையில் அறைந்து கொல்ல வலியுறுத்தினர். இறுதியாக, ரோமப்பேரரசர் வருத்தத்துடன், இயேசுவை ஆலய குருக்களிடம் ஒப்படைத்தவுடன், சிலுவையில் அறைந்து கொல்ல முடிவெடுத்தனர்.மறுநாள் காலை இயேசுவிடம் பெரிய சிலுவையை கொடுத்து, கல்வாரி மலை வரை சுமக்க வைத்தனர். பின், மலைமீது இயேசுவின் சிலுவை நடுவிலும், வலது, இடது பக்கங்களில் இரண்டு கள்ளர்களையும் அறைந்தனர். இயேசு சிலுவையில், ஏழு வார்த்தைகளை பேசி முடித்த பின் உயிர்விட்டார். இந்நிகழ்வினை, நினைவுகூர்ந்து கோவையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., லுத்தரன் உட்பட பல பிரிவுகளை சேர்ந்த சர்ச்சுகளிலும் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையிலும் நேற்று சிறப்பு ஆராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !