புரோக்கர்கள் பிடியில் திருத்தணி முருகன் கோவில்!
திருத்தணி முருகன் கோவிலுக்கு, வாகனங்களில் வரும் பக்தர்களை, சில புரோக்கர்கள் அடையாளம் கண்டு, சிறப்பு தரிசனம் செய்து தருவதாக, கணிசமான தொகையை வசூலிப்பதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை, கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகிறது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள், கார், வேன் போன்ற வாகனங்களில், மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசிக்கின்றனர். இதில், வசதி படைத்த பக்தர்கள் மற்றும் சில பக்தர்கள், விரைவு தரிசனம் செய்ய, 100 மற்றும் 50 ரூபாய் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு, மூலவரை வழிபடுகின்றனர். விரைவு தரிசன டிக்கெட்டால், கோவிலுக்கு கணிசமாக வருவாயும் கிடைக்கிறது. இந்நிலையில், மலைக்கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களை, சில புரோக்கர்கள் அடையாளம் கண்டு, அவர்களிடம், விரைவு தரிசனமும், சிறப்பு வழியில் மூலவரை தரிசிக்கலாம் எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர். தரிசனம் முடிந்த பின், குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை கட்டணமாக புரோக்கர்கள் பெறுகின்றனர். இதற்கு சில கோவில் ஊழியர்கள், உடந்தையாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பக்தர்கள் சிலர் கூறியதாவது:வாகனத்தில் இறங்குவதற்கு முன்பே, கார் அருகே வந்து, கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. உங்களால் மூலவரை தரிசிக்க ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். இதுதவிர, சிறப்பு தரிசனத்திற்கு, தலா, 100 ரூபாய் டிக்கெட் பெற வேண்டும்.அந்த தொகையை எங்களிடம் கொடுத்தால், விரைவாக தரிசனம் காண்பித்தும், சிறப்பு வழியாக மூலவரை காணலாம் என, கூறி அழைத்து செல்கின்றனர். பின், குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும் என, கட்டாயப்படுத்துகின்றனர். சில நேரத்தில் வாக்குவாதம் ஏற்படுகிறது. கோவிலுக்கு வந்து ஏன் தகராறு என, கேட்ட தொகை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதுகுறித்து, கோவில் அதிகாரிகளிடம் புகார் கூறியும், எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கோவிலுக்கு வருமானமும் குறையும்.இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, கோவில் அலுவலர் ஒருவர் கூறுகையில், புரோக்கர்கள் அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்னுடைய கவனத்திற்கு, மேற்கண்ட புகார் எதுவும் இதுவரை வரவில்லை என்றார். - நமது சிறப்பு நிருபர் -