அயனாவரம் கோவிலில் 3 சிலைகள் கடத்தல்
அயனாவரம்: அயனாவரத்தில் கோவிலில் இருந்து, மூன்று ஐம்பொன் சிலைகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டன. அயனாவரம், மேடவாக்கம் பி ரதான சாலை, குட்டியப்பன் தெருவில் பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவில், 1957ம் ஆண்டு, எல்லப்ப செட்டியார் என்பவரால் கட்டப்பட்டது. கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, நாகர், நவக்கிரகம் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. கடந்த, ௧௯௬௭ம் ஆண்டு, ௨.௫௦ லட்சம் ரூபாய் செலவில், முருகன், வள்ளி, தெய்வானை உற்சவமூர்த்திகள் செய்யப்பட்டு, வழிபாட்டிற்கு வைக்க ப்பட்டன.
தற்போது, அந்த கோவிலை எல்லப்ப செட்டியாரின் பேரன் ஜி.குமார், 33, நிர்வகித்து வருகிறார். கோவிலின் பூசாரியாக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மணி, 60, என்பவர் நியமிக்கப்பட்டார். கோவிலின் பின்புறம் உள்ள சன்னிதியில், ஐம்பொன் சிலைகள் மூன்றும் வைக்கப் பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ௭:௦௦ மணியளவில், கோவிலில் எல்லோரும் இருந்த போது, சிலைகள் திடீரென மாயமாகின. கோவில் நிர்வாகத்தார் நேற்று காலை தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், பூசாரி மணியிடம் விசாரிக்கின்றனர். இதுகுறித்து, கோவிலை நிர்வகித்து வரும் குமார் குடும்பத்தினர் கூறியதாவது: காவல் நிலையத்தில் புகார் அளித்தால், சிலையை கண்டுபிடிக்கும் பணியை போலீசார் மேற்கொள்ளாமல், எங்களது குடும்பத்தாரையே விசாரித்து வருகின்றனர். எங்கள் பகுதியில், வடமாநிலத்தோர் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்கள் யாரேனும் சிலையை திருடி கடத்தி சென்றிருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.