உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்., 3 ல் கொடியேற்றம்

சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்., 3 ல் கொடியேற்றம்

சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்., 3ல் துவங்கி 11 நாட்கள் நடக்கிறது. ஏப்., 3ல் இரவு 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் பங்குனி பொங்கல் விழா துவங்குகிறது. திருவிழா நாட்களில் அம்மன் வீதி உலா வருதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எட்டாம் திருவிழா நாளில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுவர். அன்று அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோயில் முன் வேட்டைக்கு செல்லுதல் நடைபெறும். 9 ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தும், கயர் குத்து, முடிக்காணிக்கை, முத்துகாணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை, கயர்குத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். 10ம் திருவிழாவில் தேரோட்டம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இக்கோயில் கொடியேற்றத்தின் போது கொடிமரத்தில் தென்னம் பூ வைத்து ஏற்றப்படும். திருவிழா முடிந்த பின் கொடி இறக்கிய பின் தென்னம் பூவை, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை பெண்கள் பெற்று தென்னம் பூவையும், வேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்து குடித்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற நம்பிக்கை பெண்களிடம் உள்ளது. இதனால் அம்மன் கொடி மரத்தில் இருந்து இறங்கி வழங்கப்படும் தென்னம்பூவை பெண்கள் பக்தியுடன் ஆர்வமாக பெற்றுச் செல்வது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !