உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி சிங்னாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சனி சிங்னாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் உள்ள சனி சிங்னாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சனி கோயிலுக்குள் நுழைவதற்கு கோயில் நிர்வாகமும், மகாராஷ்டிர அரசும் தடை விதித்திருந்தன. இதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. தடையை நீக்க வலியுறுத்தி மும்பை கோர்ட்டில் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், பெண்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிப்பது சட்ட விரோதமானதுடன், குடிமகனின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. அதுமட்டுமின்றி இது போன்ற தடைகள் ஆண்-பெண் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தக் கூடியவை என குறிப்பிடப்பட்டது. சுமார் கால் நூற்றாண்டுகளாக சனி கோயிலில் நுழைய தடை இருந்து வருகிறது. இதனை எதிர்த்து ஜனவரி 26ம் தேதி சனி கோயிலுக்குள் நுழைய 400 மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முயன்றனர். அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து கோர்ட் வரை சென்றது.

இன்று இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் பி.எச்.பாட்டீல், ஏ.ஏ. சயீத் கூறியது, சனி கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு மட்டும் தடை விதிக்க முடியாது. ஆண்கள் செல்லும் போது, ஏன் பெண்கள் மட்டும் செல்ல தடை விதிக்க வேண்டும். ஆண்கள் செல்லும் கோயில்களுக்குள் பெண்கள் செல்ல கூடாது என எந்த சட்டமும் இல்லை. கோயிலில் நுழைய பெண்களுக்கு உரிமை உண்டு. அப்படி நுழையும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பெண்களுக்கு அனுமதியில்லை என எந்த சட்டமும் இதுவரை இல்லை. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !