உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப். 22ல் கண்ணகி கோயில் விழா: கலெக்டர்கள் இன்று ஆலோசனை

ஏப். 22ல் கண்ணகி கோயில் விழா: கலெக்டர்கள் இன்று ஆலோசனை

கூடலுார்: கண்ணகி கோயிலில் ஏப். 22ல் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடுவது குறித்து, தேனி- இடுக்கி கலெக்டர்கள் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம், இன்று தேக்கடியில் நடக்கிறது. தமிழக- கேரள எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இது அமைந்துள்ள பகுதி, யாருக்குச் சொந்தம் என இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று, இரு மாநில பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வழிபட்டு வருகின்றனர். கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதி வழியாக இருப்பதால், தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விதிமுறை வகுக்கப்பட்டு, அதன்படி விழா நடத்தப்படும்.

ஏப். 22ல் கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தேக்கடி ராஜிவ் காந்தி அறிவியல் மையத்தில், தேனி கலெக்டர் வெங்கடாசலம், இடுக்கி கலெக்டர் கவுசிகன் தலைமையில் நடக்கிறது. தமிழக கேரள அதிகாரிகள், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் கலந்து கொள்கின்றனர். சட்டசபை தேர்தல் காலம் என்பதால் இதில் கலந்து கொள்ள இரு மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய அரசு அதிகாரிகளுக்கும், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும். அழைப்புள்ளவர்கள் வரமுடியாத பட்சத்தில் மாற்று அதிகாரிகள் கலெக்டரின் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !