அவிநாசியில் சுட்டெரிக்கும் வெயிலில் குதிரை சுமந்து ஊர்வலம்!
அவிநாசி :அவிநாசியில், சுட்டெரிக்கும் வெயிலில், ஐந்து கி.மீ., தூரம் குதிரை சுமந்து, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் இருந்து, ஆண்டுதோறும் குதிரைகளை சுமந்து ஊர்வலமாக சென்று, ஆகாசராயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்படும். நடப்பாண்டுக்கான குதிரை ஊர்வலம், நேற்று பகல், 11:00 மணிக்கு துவங்கியது. விநாயகர், மாரியம்மன், கருப்பராயன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, இரண்டு குதிரைகளை பக்தர்கள் சுமந்து புறப்பட்டனர். நடுவச்சேரி ரோடு, மடத்துப்பாளையம் ரோடு, சேவூர் ரோடு, கச்சேரி வீதி, மேற்கு, தெற்கு ரத வீதிகள், மெயின் ரோடு, மங்கலம் ரோடு வழியாக ஊர்வலம் சென்று, ஆகாசராயர் கோவிலை அடைந்தது. அங்கு, சிறப்பு பூஜை செய்து, கிடா பலியிடப்பட்டது. பக்தர்களுக்கு பொங்கல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலில், குதிரைகளை சுமந்து சென்றவர்களுக்கும், பக்தர்களுக்கும், பண்ணாரி மாரியம்மன் கோவில், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கொங்கு சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல இடங்களில், நீர்மோர், சர்பத் வழங்கப்பட்டன. ஊர்வலத்தில், ராயம் பாளையத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.