திருப்பூர் மாகாளியம்மன் கோவிலில் விழா
திருப்பூர் : திருப்பூர், லட்சுமி நகர் நான்காவது வீதி ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. கடந்த, 3ல் கிராமசாந்தி; 4ல், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00க்கு, ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோவிலில் இருந்து, 108 பால்குடம் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இரவு, 7:00க்கு, காசி விநாயகர் கோவிலில் இருந்து, அம்மை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பெண்கள், கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர்; 200க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். மதியம், 11:00க்கு, ஸ்ரீ ாமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் சார்பில், அம்மனுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டது. பகல், 12:00க்கு, உச்சி கால பூஜை; மாலையில், ஆதிவிநாயகர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை, 8:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. நாளை, சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும்.