இன்று தெலுங்கு புத்தாண்டு: மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும்!
தெலுங்குப் புத்தாண்டான யுகாதி இன்று பிறக்கிறது. திருப்பதியில் கோவில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்கப்படுவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும். கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்படும். அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடக்கும். பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும் அதன் பின் ஜீயர் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு அணிவிக்கப்படும். ஆஸ்தான பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டின் பலன் கூறுவர். கோவில்களில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும் என்பது நம்பிக்கை.
இந்த நன்னாளில் ராமாயணம் குறித்த செவிவழிக்கதை ஒன்று படித்து மகிழ்வோம். இலங்கை போரில் ராமருக்கே வெற்றி உண்டாக வேண்டும் என கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரப் பெண்கள் விரும்பினர். அதனால் கணவர், தந்தை, மகன், சகோதரர் என தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உதவியால் ராமர் வெற்றி பெற்று சீதையை மீட்டார். ராம லட்சுமணர் தலைமையில் அனைவரும் புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பினர். அவர்களுடன் வந்த வானரர் தலைவன் சுக்ரீவன், கிஷ்கிந்தையில் விமானத்தை கீழிறக்கும்படி வேண்டினான். விமானத்தைக் கண்ட வானரப் பெண்கள் அங்கு கூடினர். அவர்களில் ஒருத்தி சீதையைப் பார்த்து, “நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இந்தப் பெண்ணைக் காப்பாற்றத்தான் உயிரைப் பணயம் வைத்தார்களா?” என்று கேட்டாள்.இன்னொருத்தி, “ஆம்... இந்த பேரழகியைக் காப்பாற்றத்தான் ராமபிரானுக்கு எல்லாரும் உதவினர்,” என்றார். இவர்களது உரையாடலைக் கவனித்த இன்னொரு வானரப்பெண், “அடி...போடீ! இந்த சீதை என்னவோ அழகாகத்தான் இருக்கிறாள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், நம் இனத்திற்கு இருப்பது போல் வால் இல்லாமல் இருப்பது தான் ஒரு குறையாக என் கண்ணுக்குப்படுகிறது,” என்றாள். இதைக் கேட்டு சீதை, ராமர் உள்ளிட்ட எல்லாரும் சிரித்து விட்டனர்.நாமும் இந்த கதையைப் படித்து சிரித்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும்.