சனி சிங்னாபூர் கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி!
மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சனி பகவான் கோவிலுக்குள், பெண்களை அனுமதிக்க மாட்டோம் என, அடம்பிடித்து வந்த கோவில் நிர்வாகம், நேற்று, தன் முடிவை மாற்றிக் கொண்டது. மஹாராஷ்டிராவில், குடி பாட்வா புத்தாண்டான நேற்று, ஆண்களுடன், பெண்களும் சென்று, சனி பகவான் கோவிலில் வழிபாடு நடத்தினர். மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில், அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள சனி சிங்னாபூர் கோவில், பிரசித்தி பெற்றது. கோவிலின் உள்ளே, திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர், 2015ல், போராட்டம் நடத்தினர். இதனால், கருவறை பகுதிக்குள் நுழைய ஆண்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோவிலுக்குள் நுழைந்து, சாமி தரிசனம் செய்ய, ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு. இது ண்களின் அடிப்படை உரிமை. இதனை, அரசு நிலை நாட்ட வேண்டும். பெண்களை தடுப்பவர்களை, அரசு கைது செய்ய வேண்டும் என, ஐகோர்ட், ஏப்ரல் 1ல் உத்தரவிட்டது. இதனையடுத்து, சமீபத்தில், பெண்கள் அமைப்பினர் பேரணியாக கோவிலுக்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், அவர்களை கோவில் காவலாளிகள் தடுத்து நிறுத்தினர்.இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது; பெண்கள் அமைப்பினரை போலீசார் அப்புறப்படுத்தினர். சனி பகவான் கோவிலுக்குள், பெண்களை அனுமதிக்க வேண்டும் என, முதல்வர் தேவேந்திர பட்நாவிசும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில், நேற்று, குடி பாட்வா புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், ஏராளமானோர், சனி பகவான் கோவிலுக்கு வந்திருந்தனர். அப்போது உள்ளூரில் இருந்து வந்திருந்த ஆண்கள், ஆண்டுதோறும் செய்யப்படும் அபிஷேக பூஜையை நடத்த முற்பட்டனர். முதலில் அவர்களை கோவில் நிர்வாகிகள் தடுத்தனர்; எனினும், பின்னர் விலகி கொண்டனர். இதனையடுத்து, கருவறை பகுதியின் உள்ளே சென்று, அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். அவர்களை பின் தொடர்ந்து, ஏராளமான பெண்களும், அங்கு சென்று வழிபாடு நடத்தினர். காவலர்கள் யாரும் அவர்களைதடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதனால், பெண்கள் மகிழ்ச்சி பரவசத்துடன், பெருந்திரளாக, சனி பகவான் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.
பெண்கள் அமைப்பு வரவேற்பு: நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறோம்; இது, பெண்களுக்கு கிடைத்த வெற்றி. ஆண் - பெண் பாகுபாட்டிற்கு எதிரான எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி!
- திருப்தி தேசாய் பூமாதா பெண்கள் அமைப்பு
கோர்ட் முடிவை ஏற்கிறோம்: கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கும் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளோம். வேறுபாடு பார்க்கக் கூடாது என்ற கோர்ட் உத்தரவை ஏற்கிறோம். ஆண், பெண் என பாகுபாடு இன்றி அனைவரும் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகி, சாயாராம் பங்கர் கூறினார். மற்ற கோவில்களிலும் அனுமதி தேவைமஹாராஷ்டிராவில், சனி பகவான் கோவிலைத் தொடர்ந்து, பெண்களுக்கு அனுமதி மறுக்கும், நாசிக் திரிம்பகேஸ்வர், கோலாப்பூர் மஹாலட்சுமி கோவில்களிலும் பெண்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என, பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.