மூன்றையும் விடுங்கள் நன்மை பெறுங்கள்!
இந்த உலகத்தில் பிறந்த பெரும்பாலான மனிதர்கள் அறிந்தோ, அறியாமலோ பாவச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன்பிறகு, மனசாட்சி உறுத்துவதால், இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால், தவறு செய்தவர்களை இறைவன் மன்னிப்பதில்லை. நிச்சயமாக தண்டனை வழங்கியே தீருவான். ஆனால் மூன்றே மூன்று வகையினர் இந்த தண்டனையிலிருந்து விலக்குப்பெற வழியுண்டு. அவர்கள் யாரெனில் உண்மையாளன், கோபப்படாதவன், இறைவனிடம் மன்னிப்பு கேட்பவன் ஆகியோர் மட்டுமே. இந்த மூன்று வகையினரை மட்டும் அல்லாஹ் மன்னிக்கிறான். உண்மைக்கு மாறாக பேசுவதைவிட்டு, தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தை தடுத்துக் கொள்பவனை விட்டு, மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றி விடுவான். இறைவனிடம் மன்னிப்பு கோருபவனை அல்லாஹ் மன்னித்து விடுவான், என்கிறார் நபிகள் நாயகம். ஆனால் இப்போது எடுத்ததெற்கெல்லாம் பொய் சொல்கிறார்கள். கூட்டமாக இருக்கும் பேருந்தில் தவறுதலாக ஒருவரது கால் பட்டு விட்டால் கூட கோபத்தின் உச்சிக்குப்போய் தகராறு செய்கிறார்கள். தவறு செய்தால் அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்களே தவிர, அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்க முன் வருவதில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால், நபிகள் நாயகத்தின் இந்த போதனை மனதில் இருக்க வேண்டும். இனியேனும் பொய், கோபம், தவறை நியாயப்படுத்துதல் ஆகிய குணங்களை அகற்றி விடுங்கள்.