உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 8 ஆண்டுகளாக ராஜகோபுர பணி இழுபறி: காலடிப்பேட்டையில் ராமநவமி வீதியுலா கட்!

8 ஆண்டுகளாக ராஜகோபுர பணி இழுபறி: காலடிப்பேட்டையில் ராமநவமி வீதியுலா கட்!

திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில், இந்த ஆண்டும் கோபுர பணிகள் முடியாததால், ராமநவமி வீதியுலா நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும், 15ம் தேதி ராமநவமி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில், ஒன்பது நாள் உற்சவம் கடந்த வாரம் துவங்கியது. ராமநவமி அன்று, காலையில் ராமர், சீதா, ஆஞ்சநேயர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனமும், மாலையில் வாகன புறப்பாடும் நடைபெறும். கோவிலில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டிருந்த ராஜகோபுரத்தை இடித்து விட்டு, புதிதாக, 61 அடியில், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள், 2008ம் ஆண்டு துவங்கியது. ஆகமப்படி, ராஜகோபுர திருப்பணி நடக்கும் போது, சுவாமி, அதை கடந்து வெளியில் சென்று, வீதியுலா போக முடியாது. அதனால், கடந்த எட்டு ஆண்டுகளாக, வீதியுலா எதுவும் நடக்கவில்லை. வாகன புறப்பாடுகள் இல்லாதததால், கடந்த எட்டு ஆண்டுகளாக, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ராமர் உற்சவம், உடையவர் உற்சவம் அனைத்தும், கோவிலுக்குள்ளேயே நடந்து வருகின்றன. மேலும், மர வாகனங்கள் அனைத்தும் பயன்படுத்தப் படாததால், பழுதடைந்து கிடக்கின்றன. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபுர பணியை விரைந்து முடிக்க வேண்டும்; மர வாகனங்களை பராமரிக்க வேண்டும்; அடுத்த உற்வசத்திலாவது வாகன புறப்பாடுகள் இருக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !