அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
அவிநாசி: சிவாச்சார்யார்கள் வேதங்களை பாராயணம் செய்ய, சிவகண பூத பஞ்ச வாத்தியங்கள் இசைக்க, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, மற்றும் கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதுமான, பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேராகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். நடப்பாண்டு திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரம் பொலிவூட்டப்பட்டு, சிறப்பு பூஜை, காலை, 6:00 மணிக்கு துவங்கின. கணபதி ஹோமத்துக்கு பின், கொடியேற்ற பூஜைகள் நடைபெற்றன.
தேவராயன்பாளையம் கொடிக்கட்டு மிராஸ்தார்கள், கொடித்துணியை பிரகார உலாவாக எடுத்துச் சென்று வழிபட்டனர். பெங்களூரு வேத விக்ஞான் மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் தலைமையில், சிவாச்சார்யார்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், வேத மந்திரங்கள் பாராயணம் செய்ய, சிவகண பூத பஞ்ச வாத்தியங்கள் இசைக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடிமரம் முன் எழுந்தருளிய, சோமாஸ்கந்தர், கருணாம்பிகை அம்மன், விநாயக பெருமான், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. சுவாமி புறப்பாடு, நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது. திருப்புக்கொளியூர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, செயல் அலுவலர் அழகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றிரவு, 7:00 மணிக்கு பூத, அன்ன, அதிகார நந்தி, இந்திர மற்றும் கிளி வாகன காட்சிகளும்; நாளை, புஷ்ப விமானம், கைலாய வாகன காட்சியும் நடைபெறும்.