விஷூ கனி தரிசனம் : சபரிமலையில் திரண்ட பக்தர்கள்!
சபரிமலை: சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 10-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. 11-ம் தேதி முதல் நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு படி பூஜை நடக்கிறது.சித்திரை ஒன்றாம் தேதியான நேற்று அதிகாலை நான்கு மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு முன்னிலையில் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்து உள்ளே சென்றனர், தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு காய்கனிகள் தெளிவாக தெரியும் வகையில் விளக்கேற்றிய பின்னர் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கனி தரிசனம் பார்த்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் நாணயங்களை கை நீட்டம் வழங்கினர்.காய்கனிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐயப்பனை கனி கண்டு வணங்க அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் முண்டியடித்தது. 18 படியேறுவதற்கான வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. காலை 11 மணி வரை இந்த கூட்டம் நீடித்தது.சித்திரை பூஜைகள் முடிந்து வரும் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் வைகாசி மாத பூஜைகளுக்காக மே 14-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.