உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: தேனிகோயில்களில் விசேஷ பூைஜ!

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: தேனிகோயில்களில் விசேஷ பூைஜ!

தேனி: சித்திரை திருவிழாவில் அல்லிநகரம் வீரப்ப அய்யனார் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அல்லிநகரம் பனசலாறு வீரப்ப அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழா 28ம்தேதி மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து, பூக்குழி திருவிழா, காவடிகளுக்கு கலசம் கட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் மாலை வீரப்ப அய்யனார் மின் அலங்காரத்தில் தேனி பங்களாமேட்டில் உள்ள சோலைமலை அய்யனார் கோயிலுக்கு காவடியுடன் சென்றார். தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளையொட்டி நேற்று வீரப்ப அய்யனார் காலையில் காவடிகளுடன் புஷ்ப அலங்காரத்தில் வெள்ளை குதிரை வாகனத்தில் புறப்பட்டார். அல்லிநகரம் தெருக்கள் வழியாக கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். தெருக்களில் பக்தர்கள் சாமியை வரவேற்று தரிசனம் செய்தனர். சாமியை பின் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சாமி மலை அடிவாரத்தில் உள்ள கோயிலுக்கு சென்றடைந்தார். இரவு மலர் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள் பாலித்தார். திருவிழா ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராம கமிட்டியினர் செய்தனர். கோடை காலம் பக்தர்களின் தாகம் தணிக்க தேனி முதல் அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் வரை ஏராளமான நன்கொடையாளர்கள் தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகம் தணித்தனர்.

மாவூற்று வேலப்பர் கோயில்:  ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.  தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மலைப்பகுதியில் ஓங்கி உயர்ந்த மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து எப்போதும் வற்றாத சுனைநீர் வருவது கோயிலின் தனிச்சிறப்பு. சித்தர்கள் இப்பகுதியில் இருந்ததாகவும், மூலிகைகள் கலந்து வரும் சுனை நீரில் குளிப்பதால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

காவடி, பால்குடம்: ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் கோயில் வளாகத்தில் குவிந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் மாவூற்று வேலப்பருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு ஆட்டு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்வசதி செய்யப்பட்டிருந்தது. டி.எஸ்.பி.,குலாம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

*சக்கம்பட்டி கீழப்புதுத்தெரு மெயின்ரோட்டில் உள்ள வீரப்ப அய்யனார் கோயில் நடந்த சித்திரை  திருவிழாவில் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். தேனி வர்த்தக பிரமுகர் நடராஜ் முன்னிலை வகித்தார். பெண்கள் தீர்த்த குடங்கள், பால்குடங்கள் சுமந்து ஊர்வலமாக சென்று வீரப்ப அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

சுருளியில் குவிந்த பக்தர்கள்: கம்பத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை சுருளி அருவியில் குளிக்க பக்தர்கள் கூட்டம் குவிந்தது இதனால் நெரிசல் ஏற்பட்டது. சில வாரங்களாக அருவியில் தண்ணீர் மிக குறைவாக விழுந்து கொண்டிருந்தது. புத்தாண்டு தினத்தன்று மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால், இரவங்கலாறு அணையில் இருந்து சிறிதளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குளிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் அருவியில் விழுந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு குவிந்தனர். அருவியில் குளித்து விட்டு அங்குள்ள வேலப்பர் கோயில், பூதநாராயணர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். இங்குள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகத்தினை சிவனடியார் முருகன் நடத்தினார். அண்ணாமலையார் கோயிலில் சர்க்கரை பொங்கல், நீர்மோர் வழங்கப்பட்டது. ராயப்பன்பட்டி சண்முகநாதன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் இப் பூஜைகளில் பங்கேற்றனர். கோயில் கமிட்டியினர் அன்னதானம் வழங்கினர்.  உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடைபெற்றது. கம்பம் வேலப்பர் கோயில், கம்பராயப் பெருமாள் கோயில், கவுமாரியம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர்.

போடி: போடி தீர்த்த தொட்டி ஆறுமுகநாயனார், சித்திரபுத்திர நாயனார் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. போடி அருகே தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சித்திரை முதல் நாளில் நடக்கும். நேற்று முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தது. மூலிகை கலந்து தீர்த்த சுனைகளில் பக்தர்கள் நீராடி சாமி அருள் பெற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் சுமதி செய்தார்.  போடி-–தேனி ரோட்டில் சித்திரபுத்திரனார் கோயிலில் சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகளும் நடந்தன. போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சுப்பிரமணிய கோயிலில் முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சீனிவாசப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !