புதுச்சேரி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
புதுச்சேரி: தமிழ் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, புதுச்சேரியில் பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தமிழ்ப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கோவிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மணக்குள விநாயகர் கோவிலில், காலை முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர்: புத்தாண்டையொட்டி, பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சீரடி சாய்பாபா
பிள்ளைச்சாவடி, சீரடி சாய்பாபா கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் காலை 8.00 மணிக்கு துவங்கியது. அதனை தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், புஷ்பாபிஷேகம், பல்லக்கு உற்சவம் மற்றும் பகல் 12.00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதேபோன்று, முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது.