காவல் தெய்வத்துக்கு தேர்த்திருவிழா களை கட்டியது உடுமலை!
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழாவையொட்டி, குட்டை திடலில் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் திசை பல கோவில்களிலிருந்தும் மாறுபட்டிருப்பதால், மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். ஆண்டுதோறும், திருவிழாக பங்குனி மாத இறுதியில் நோன்பு சாட்டப்பட்டு, சித்திரை மாதம் தேரோட்ட திருவிழாவும் நடக்கிறது. பொள்ளாச்சி, பழநி, மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் இத்திருவிழாவை காண வருகின்றனர். இவ்விழாவையொட்டி, தளி ரோட்டிலுள்ள குட்டை திடலில் பொழுது போக்கு விளையாட்டுகளும் அமைக்கப்படும். தேரோட்டம் முடிந்து வானவேடிக்கை என பத்து நாட்களுக்கு இவ்விளையாட்டுகள் நடத்தப்படும். விளையாட்டு சாதனங்கள் அமைத்து, மக்கள் பொழுது போக்க, வருவாய் துறையினர் மூலம் ஆண்டுதோறும் குட்டை திடல் ஏலம் விடப்படுகிறது.
கடந்தாண்டு, ஏலத்தொகை திருப்தியான வகையில் இல்லாததால், சிண்டிகேட் முறையில் நடத்தினர். இருப்பினும் நீண்ட இழுபறிக்கு பின்னரே, ஏலத் தொகை முடிவானது. நடப்பாண்டுக்கான ஏலம், கடந்த 5ம் தேதி நடந்தது. இதில் குட்டை திடல் 31 லட்சத்து, 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதில், மே 1ம் தேதி வரை, கடைகள் மற்றும் பொழுது போக்கு விளையாட்டு சாதனங்கள் அமைத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 12ம் தேதியே குட்டை திடலில், பல்வேறு விளையாட்டு சாதனங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. தற்போது, கோலம்பஸ், ஜாயின்ட் வீல், ராட்டினம், டோரன்டோ உள்ளிட்ட சாதனங்கள் தயார் படுத்தப்பட்டு வருகின்றன. கோவில் அருகேயே குட்டை திடலும் அமைந்திருப்பதால், விழா முடியும் வரை இங்கும் மக்கள் கூட்டம் களைகட்டியே காணப்படும். மாலை நேரங்களில் மட்டுமே விளையாட்டுகள் நடக்கிறது. கம்பம் போட்ட பின்னரே, கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் வர துவங்குகிறது. வரும் 19ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி இருப்பதால், விளையாட்டு சாதனங்களை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கட்டணம் குறைக்க எதிர்பார்ப்பு: கடந்த முறை ஏலத்தொகை அதிகமாக இருப்பதாக தெரிவித்தே, காண்ட்ராக்டர்கள் ஏலத்தை தாமதப்படுத்தினர். இருப்பினும், இறுதியில் குறைவான தொகைக்கே குட்டை திடல் ஏலம் எடுக்கப்பட்டது. எனினும், விளையாட்டு சாதனங்களுக்கான நுழைவு சீட்டு அதற்கு முந்தை ஆண்டுகளை விடவும் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. சிறு சிறு விளையாட்டுகளுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் மக்களின் கூட்டமும் வழக்கத்தை விடவும் குறைந்து காணப்பட்டது. இம்முறையாவது கூடுதல் கட்டணமில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைவும் வகையில் நடுநிலையான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.