உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணத்தை பயனுள்ளதாக செலவிடுவது எப்படி?

பணத்தை பயனுள்ளதாக செலவிடுவது எப்படி?

உன்னிடம் நிறைய பொருள் இருக்கும்பட்சத்தில் அதை எப்படி செலவிட வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் சில கருத்துக்களை சொல்லிஉள்ளார். அந்த வழிகாட்டுதலின்படி நடந்து கொண்டால் இறைவனே நமக்காக செலவழிப்பான். இதுபற்றி நபிகள் நாயகம், தேவைக்கு அதிகமான உனது செல்வத்தை ஏழ்மையில் வாடும் இறையடியார்களுக்காகவும், மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடு. அதுவே உனக்கு நன்மை தரும். தேவைக்கு அதிகமான செல்வத்தை தேவை உடையவர்களுக்காக நீ செலவிடாவிட்டால் இறுதியில் அது உனக்கு தீங்கு பயக்கும். உன்னிடம் தேவைக்கு அதிகமாகச் செல்வம் இல்லை; உன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மட்டுமே செல்வம் இருக்கின்றது என்றால், அதிலிருந்து நீ செலவிடாவிட்டால் அதற்காக அல்லாஹ் உன்னைக் கண்டிக்க மாட்டான். நீ எவருக்குப் பொறுப்பாளியாய் இருக்கின்றாயோ அவர்களிலிருந்து தர்மம் செய்யத் தொடங்கு, என்கிறார். மேலும், நீ தேவையுள்ள என்னுடைய அடியார்களுக்காகவும் மார்க்கப் பணியை வளர்ச்சி பெறச் செய்வதற்காகவும் செலவிட்டால் நான் உனக்காகச் செலவு செய்வேன், என்றும் அல்லாஹ் கூறியதாகச் சொல்கிறார். இந்த நபிமொழியின் விளக்கம் இது தான். உனக்காகச் செலவு செய்வேன் என்று இறைவன் சொல்வது, மனிதன் தன் சம்பாத்தியத்திலிருந்து பிற மக்களின் தேவைகளுக்காகவும், மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடுகின்ற செல்வம் எதுவாக இருந்தாலும் அது வீணாவதில்லை. அவன் அதற்கான கூலியை மறுஉலகத்திலும், இவ்வுலகத்திலும் பெற்றுக் கொள்வான். உலகில் அவனது செல்வத்தில் செழிப்பும், வளமும் உண்டாகும். மறுமையில் அவன் கூலியாகப் பெறுவது எதுவாயினும் அதன் அளவை மதிப்பிட்டு விட முடியாது. செல்வந்தர்களாய் இருந்தும் செலவழிக்காமல் இருப்பவர்கள் அழிந்துபோய் விட்டார்கள். முன்னால் இருப்பவர்களுக்கும், பின்னால் இருப்பவர்களுக்கும், வலதுபக்கம் இருப்பவர்களுக்கும், அனைவருக்கும் செல்வத்தை அள்ளித் தருபவர்கள் வெற்றியடைந்தவர்கள் ஆவர். ஆனால், இப்படிச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர், என்று நபிகள் நாயகம் சொல்வதில் இருந்து பிறருக்கு பொருளுதவி செய்வதால் ஏற்படும் நன்மை தெரிய வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !