மீனாட்சி கோயில் பழைய திருக்கல்யாண மண்டபம் மலர்களால் அலங்கரிப்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பழைய திருக்கல்யாண மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.இக்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்.,19) காலை 8.30 முதல் காலை 8.54 மணிக்குள் நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்து மணக்கோலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வர். அங்கு பகல் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதிக்காக முதல் முறையாக மண்டபம் குளு குளு வசதி செய்யப்பட்டுள்ளது.
வெட்டி வேர் வாசம்: மண்டபம் முழுவதும் மலர்கள், 100 கிலோ வெட்டி வேர்களால் அலங்கரிக்கும் பணியில் திண்டுக்கல்லை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஆடி வீதி - வடக்காடி சந்திப்பில் திருக்கல்யாண மணமேடை ரூ.10 லட்சம் மதிப்பில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கும் பணி இன்று துவங்குகிறது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் வெட்டி வேர்களும் அலங்காரத்தில் பெருமளவு இடம் பெறுகிறது. இதற்காக ஊட்டி, கொடைக்கானல், சிறுமலை, கொல்லிமலை, வெள்ளியங்கிரி மலைகளில் இருந்து 500 கிலோ வெட்டி வேர்கள் வரவழைக்கப்படவுள்ளன. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.
இலவச காலணி காப்பகம்: சித்திரை வீதிகளில் செயல்படும் இலவச காலணி பாதுகாப்பகங்கள் ஐந்தும் மூடப்பட்டிருக்கும். அதற்கு பதில் தெற்கு சித்திரை வீதி போலீஸ் கமிஷனர் அலுவலக பழைய கட்டடம் அருகில், குன்னத்துார் சத்திரம் பின்புறம் மீனாட்சி பார்க் எதிரில் இலவச தற்காலிக காலணி பாதுகாப்பகம் செயல்படும். வடக்கு - கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு வேளாண் அலுவலகம் அருகில், வடக்கு கோபுரம் எதிர் தெரு நகரத்தார் மண்டபம் பக்கவாட்டு பகுதி, மேற்கு கோபுரம் எதிர் தெரு கரூர் வைஸ்யா வங்கி அருகில், தெற்கு - மேற்கு சித்திரை வீதிகள் சந்திப்பு அருகில், அறிநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகம் அருகிலும் அமைக்கப்பட்டுள்ளன.