உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

நாளை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நாளை, காலை, 8:30 மணி முதல் 8:54 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும், கோவிலுக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் உற்சவர்கள் தரிசனத்தை காணவரும் பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு கோபுரத்தில் துவங்கி, கோவிலின் பெரும் பகுதியை சுற்றி வந்த பிறகே தரிசிக்க முடியும்.கோவில் வளாகம், கோவிலுக்கு வெளிப்பகுதி மற்றும் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே கோவில் சார்பில் திருக்கல்யாண மொய் காணிக்கை பெறப்படும்.

அனுமதி நேரம் அறிவிப்பு : திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்கள், இலவச தரிசனம் செய்ய, தெற்கு கோபுரம் வழியாக முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். உபயதாரர் மற்றும் 500 ரூபாய் நுழைவு கட்டணம் பெற்றவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும், 200 ரூபாய் கட்டண தரிசனம் செய்ய, வடக்கு கோபுரம் வழியாகவும், காலை, 6:00 முதல் காலை, 7:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். மொத்தம், 9,500 பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்காடி வீதியில் இரண்டு, மேற்கு ஆடி வீதி, தெற்காடி வீதியில் தலா ஒன்று என, 20 இடங்களில் அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருக்கல்யாண நிகழ்ச்சியை அலைபேசியில் படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !