உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சின திருப்பதி, பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தட்சின திருப்பதி, பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஓசூர்: ஓசூர் அடுத்த, கோபசந்திரம் தட்சின திருப்பதி கோவில் மற்றும் தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவிலில், இன்று (ஏப். 18) காலை தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், சவுந்தரவல்லி சமேத பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம், இன்று (ஏப். 18) காலை, 10 மணிக்கு நடக்கிறது. இதில் கலெக்டர் கதிரவன், சப்-கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்று, வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்க உள்ளனர். தேரோட்டத்தில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சவுந்திரராஜன் தலைமையில், 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓசூர் அடுத்த கோபசந்திரத்தில் உள்ள, தட்சின திருப்பதி பூதேவி சமேத வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா இன்று (ஏப். 18) காலை, 10 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். தேர்த்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், வாண வேடிக்கை, பல்லக்கு உற்சவம், சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சூளகிரி போலீசார் சார்பில், பாதுகாப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !