ஈரோட்டில் ராம நவமியை முன்னிட்டு சீதா கல்யாணம்
ADDED :3501 days ago
ஈரோடு: ராம நவமியை முன்னிட்டு, ஈரோட்டில் நடந்த சீதா கல்யாண வைபவத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில், ராம நவமியை முன்னிட்டு, ரங்கபவனம் டிரஸ்ட் சார்பில், சீதா கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி கோதண்ட ராமசுவாமி, சீதா, லட்சுமணருக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெருமாள் புறப்பாட்டுக்குப் பின், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடந்தது. முன்னதாக அதிகாலையில் ஹோமம் வளர்க்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தாலி அணிவித்தபின், சுவாமிகள் தேங்காய் உருட்டி விளையாடும் நலங்கு நிகழ்ச்சி நடந்தது. திருமணத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.