உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது!

பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது!

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காப்புக்கட்டுடன் துவங்கியது. ஏப்., 21 ல் நள்ளிரவு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக நேற்று காலை 7.45 மணிக்கு மூலவர் பரமஸ்சுவாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள், யாகமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் காப்பு கட்டப்பட்டது.பின்னர் தீர்த்தகுடங்கள் புறப்பாடாகி யாகசாலையை அடைந்தது. இரவு பெருமாள் ஆடி வீதியில் வலம் வந்தார். யாகசாலை முன் அர்ச்சகர்களின் வேத கோஷம் முழங்க சிறப்பு தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து ஏப்.,21 காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்தக் குடங்கள் புறப்பாடாகி பெருமாள், கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். அன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் தீ வெட்டி வெளிச்சத்தில், பெருமாள் ‘கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் அலங்கார கோலத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.  மறுநாள் தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளும் அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து ஏப்.,23 ம் தேதி இரவு மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்து தசாவதாரமும், மறுநாள் கருடசேவையும், ஏப்.,26 ம் தேதி பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் கோயிலை அடைவார்.  ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !