அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்!
அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, இன்று நடைபெறுகிறது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு, பல்வேறு வாகனங்களில், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு விநாயகர், சோமாஸ்கந்தர், கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி களும், கரிவரதராஜ பெருமாளும் தேர்களுக்கு எழுந்தருளினர். காலை முதலே பக்தர்கள், நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கொளுத்தும் வெயில் காரணமாக, தேரடி மற்றும் தேர் நிலை மற்றும் பரிவார மூர்த்திகளின் தேர் ஆகிய இடங்களில், ஷெட் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு அமைப்பு சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது. பெரிய தேர் சக்கரங்களுக்கு ஹைட்ராலிக் பிரேக் பொருத்துதல், வடக்கயிறு இணைக்கும் பணி முடிவுற்றது. இன்று காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. தேருக்கு முன்னும், பின்னும் புல்டோசர் உதவியுடன், பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பர். இன்று காலை, 10:00 மணி முதல், தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில், மேற்கு ரத வீதி, பூவாசாமி திருமண மண்டபம், அவிநாசியப்பர் அன்னதான குழு சார்பில், தேவாங்கர் மண்டபம், சுந்தரமூர்த்தி நாயனார் அன்னதானக்குழு சார்பில், செங்குந்தர் மண்டபம், ஸ்ரீகருணாம்பிகை அன்னதான குழு சார்பில், கங்கவர் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படும். அவிநாசி பேரூராட்சி மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் குடிநீர், நீர்மோர், பானகம், ஜூஸ் வழங்கப்படும்.
போக்குவரத்து மாற்றம்: திருப்பூர் - ஈரோடு ரோடு வழியாக கிழக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள், கால்நடை மருத்துவமனை, சேவூர் ரோடு, ராயம்பாளையம் வழியாக திருப்பி விடப்படும். கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள், மங்கலம் ரோடு, பைபாஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். தேரோட்டம் முடிந்ததும், வழக்கமான பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
கண்காணிப்பு கேமரா: கடந்தாண்டு தேரோட்டத்தில், சரக்கு ஆட்டோவில் வைத்து அன்னதானம் வழங்கியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், ஏழு பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டது. நடப்பாண்டு, ஆட்டோவில் வைத்தும், முறையற்ற வகையிலும் அன்னதானம் வழங்குவதை போலீசார் தடை செய்துள்ளனர். அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், கோவில் வளாகம் மற்றும் தேரடி, நான்கு ரத வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது; அவை, கோவில் அலுவலக கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளன.