திருப்போரூர் அம்மன் கோவிலில் வசந்த கால மகா நவராத்திரி விழா
திருப்போரூர்: செம்பாக்கம் பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில், 5வது ஆண்டு வசந்த கால மகா நவராத்திரி விழா நடைபெற்றது. திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில், பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சமீபத்தில் தான், 9 அடி மூலிகை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. பின், 7 முதல், 15ம் தேதி வரை, வசந்த கால மகா நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, ஒன்பது நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில், லலிதா திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டன. லலிதாம்பிகை அம்மன், ஒன்பது நாட்களும் ஒன்பது அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இறுதி நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம், மூலிகை அம்மனுக்கு நவ கலசாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இவ்விழாவில், திரளான பக்தர்களும், பகுதிவாசிகளும் கலந்துகொண்டனர்.