உடுமலை அருகே நிலத்தடியில் விண்ணக பெருமாள் கோவில்!
உடுமலை : உடுமலை அருகே மண்ணில் புதைந்திருந்து கண்டறியப்பட்ட கோவில் விண்ணகப்பெருமாள் கோவில் என்பதும், 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, வைணவர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இருந்துள்ளதும் கல்வெட்டுகளில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கல்லாபுரம் வேல்நகர் பகுதியில் சிவகுமார் என்பவரது விளைநிலத்தில், கடந்த வாரம் மண் சமப்படுத்தும் பணிகள் மேற்கொண்டபோது, புதைந்திருந்த கோவிலின் ஒரு பகுதி வெளிப்பட்டது. கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு மற்றும் சிதிலமடைந்த சில சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. வருவாய்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பிற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மண்ணில் புதையுண்டிருந்த கோவில் கல்வெட்டுகளை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில், இக்கோவில் விக்கிரம சோழ விண்ணகப் பெருமாள் கோவில் என்பதும், பூஜை காரியங்களுக்காக, நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட, கோவை வானவராயர் பவுண்டேஷன் ஜெகதீசன், உடுமலை கொங்கு மண்டல ஆய்வு மைய அமைப்பாளர் ரவி கூறியதாவது: கல்லாபுரம் வேல்நகரில் கண்டறியப்பட்ட கோவிலில் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும், சிதைந்த நிலையில் ஒரு அம்மன் சிலையும் உள்ளது. கல்வெட்டுகளில் ஒன்று மட்டும் முழுமையாக உள்ளது. மற்ற கல்வெட்டுகள், துண்டு துண்டாக உள்ளன. முழுமையான கல்வெட்டு கோவிலின் தெற்கு அதிட்டானம் (கீழ்ப்பகுதி) பகுதியிலுள்ள ஜகதியில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி., 13ம் நூற்றாண்டில் கொங்கு நாட்டுப் பகுதியை ஆட்சி செய்த, கொங்கு சோழர்களின் இறுதி மன்னரான மூன்றாம் விக்கிரம சோழனின், 25வது ஆட்சியாண்டு கல்வெட்டாகும். கோவில், கரைவழி நாட்டு பிரிவில் இருந்து பிரிந்த ராஜராஜ வளநாட்டை சேர்ந்த, பிரம்மதேயமான ஸ்ரீ உலகுடைய பிராட்டி சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் அமைந்திருந்ததாகவும், விக்கிரமசோழ விண்ணக பெருமாள் கோவில் எனவும், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இக்கோவில், கி.பி., 13ம் நூற்றாண்டை சேர்ந்த விக்கிரமசோழன் காலத்தில் கட்டப்பட்டது என கருதலாம். மண்மூடிய நிலையிலுள்ள கல்வெட்டை முழுமையாக ஆராய்ந்தால், இவ்விடத்தின் வரலாறு தெரியவரும். "திக்கட்டு மண்டலத்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்ற கல்வெட்டிலுள்ள சொல் பிராமணர்கள் அதிகளவு இப்பகுதியில் வாழ்ந்த ஊராக இருக்கலாம். இப்பகுதியை, சுற்றுப்பகுதி மக்கள் கோட்டைமேடு என அழைப்பதால், கொங்கு 24 நாடுகளில் இருந்து பிரிந்த ராஜராஜவள நாட்டின் கோட்டை இப்பகுதியில் இருந்திருக்கலாம் என கருத இடமுண்டு. வேதநாயக பட்டர் மகள் குழலாழி தீபம் ஏற்றுவதற்கு, ஒரு போகத்திற்கு 27 கலம் நெல் வழங்க வேண்டும் என்பது உட்பட தானம் கொடுக்கப்பட்ட செய்திகள், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.