திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோவில் ராட்ஷத கொழுக்கட்டை!
திருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு, 150 கிலோ ராட்ஷத கொழுக்கட்டை நெய்வேத்யம் செய்யப்படவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி முடிந்த நான்காம் நாளன்று வரும் சதுர்த்தி திதியை விநாயகருக்கு உகந்த நாளாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. பௌர்ணமி முடிந்து நான்காவது நாள் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக, மாதந்தோறும் விநாயகருக்கு பக்தர்கள் விரதமிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழிந்த நான்காம் நாளன்று வரும் சதுர்த்தி, மஹா விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. புராண காலத்தில், கஜமுகாசுரன் என்ற அசுரன் கடுந்தவம் இருந்து, மனிதர், விலங்கு, தேவர், ஆண், பெண், ஆயுதங்களால் கொல்லமுடியாத வரத்தை சிவனிடம் பெற்றான். அசுரகுல வழக்கப்படி வரத்தை பெற்ற உடன், தேவர், முனிவர், மக்களை துன்புறுத்தினான். அதனை வதம் செய்ய விநாயகர் அவதாரமெடுத்தார். அவரை, ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தியன்று, யானை முகத்தோடும், மனித உடலோடும் சிவன் தோற்றுவித்தார். விநாயகர் தனது தந்தங்களில் ஒன்றை ஒடித்து, கஜமுகாசுரனை வென்று, மூஞ்சுறாக மாறிய அவன் மீதேறி அமர்ந்து, அவனை தனது வாகனமாக அருள்பாலித்தார். விநாயகரின் அவதாரத்திருநாளான சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்கவிநாயகர் கோவிலில் சதுர்த்திப்பெருவிழா, நாளை (செப்., 1ம் தேதி) துவங்குகிறது. செப்., 1ம் தேதி, பாலகணபதி அலங்காரத்தில் அருள்பாலிக்கவிருக்கும் விநாயகருக்கு, 150 கிலோ எடையுள்ள ராட்ஷத கொழுக்கட்டை நெய்வேத்யம் செய்யப்படுகிறது. நெய்வேத்யம் செய்யப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து செப்., 14ம் தேதி வரை நடக்கும் விழாவில், விநாயகருக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்விக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை இணை கமிஷனர் இளம்பரிதி, உதவி கமிஷனர் சித்ரா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.