பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஓசூர்: ஓசூர் அடுத்த, சூளகிரி அருகே உள்ள தட்சின திருப்பதி கோவில் மற்றும் தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவிலில் நடந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேன்கனிக்கோட்டையில் புகழ்பெற்ற பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் தேரோட்டம், நேற்று காலை, 10.30 மணிக்கு நடந்தது. கலெக்டர் கதிரவன், சப்-கலெக்டர் செந்தில்ராஜ், தாசில்தார் கோவிந்தன், செயல் அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த கோபசந்திரத்தில் உள்ள தட்சின திருப்பதி வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில், நேற்று காலை, 6 மணிக்கு, வாரி அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து காலை, 10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. 40 அடி உயர தேரில் எழுந்தருளிய வெங்கடேஷ்வரா சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மாலையில் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, வாண வேடிக்கை, பல்லக்கு உற்சவம், சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (ஏப். 19) இரவு பிரகார உற்சவம், வசந்தோற்சவம், தெப்ப உற்சவம் நடக்கிறது.