மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: பத்தாம் நாள்!
சித்திரை திருவிழாவில் இன்று மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. திக்விஜயம் செய்த மீனாட்சி உலகையெல்லாம் வென்று சிவனின் மனதையும் வென்றாள். மீனாட்சிக்கு சிவனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர் சுந்தரேஸ்வரர் என்ற பெயருடன் மதுரை வந்தார். தெய்வத் தம்பதியர் திருமணத்தை தரிசிக்க வானுலகமே பூமிக்கு வந்தது. பெண்ணின் தந்தை மலையத்துவஜ பாண்டியனும், தாய் காஞ்சனமாலையும் மணமகன் சுந்தரேஸ்வரரை வரவேற்றனர். அகத்தியர், நாரதர் போன்ற ரிஷிகளும் மதுரைக்கு வந்தனர். பிரம்மா முன்னிருந்து யாக வேள்வியை நடத்தினார். கலைமகளும், அலைமகளும், மணமகள் மீனாட்சியை அழைத்து வந்தனர். கொட்டியது மேளம், குவிந்தது கோடி மலர், கட்டினார் மாங்கல்யம். அந்த மணக்கோலத்தில் சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் இன்று இரவு மாசிவீதிகளில் வலம் வருவர். இக்காட்சியைத் தரிசித்தால் விரைவில் மேளச்சத்தம் கேட்கும்.