வீரபாண்டி கோயிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றம்
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடக்கிறது. தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 10ம்தேதி துவங்கி 17ம்தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு கோயிலில் அதற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. கன்னீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து கம்பம் எடுத்துவரப்பட்டு கொடியேற்றம் நடைபெறும். கொடியேற்ற சிறப்பு: கொடியேற்றம் துவங்கி 22வதுநாளில் இருந்து எட்டுநாட்கள் திருவிழா நடைபெறும். கொடியேற்றம் முதல் 21 நாட்கள் பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருப்பர். இந்த நாட்களில் அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். நெய்வேத்யமாக காப்பு அரிசி மாவு மட்டுமே படைக்கப்படும். கொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை கொடி கம்பம் நடப்படும் அத்தி மரத்திலான முக்கொம்புக்கு, மண் கலயத்தில் முல்லை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுவது முக்கிய ஐதீகமாகும். அத்திமரக்கொம்பையே அம்மன், சிவனாக பூஜிக்கிறார். 21 நாட்கள் அத்திமரக்கொம்பிற்கே மாவு பூஜை நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.