ஆடி அசைந்து பவனி வந்த அவிநாசி லிங்கேஸ்வரர் அம்மன் தேர்!
அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று, கருணாம்பிகை அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் தேர், வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில், நேற்று கருணாம்பிகை அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. காலை, 11:00 மணிக்கு தேர் சக்கரங்கள், சன்னை மரங்கள், முட்டுக்கட்டை ஆகியவற்றுக்கு பூஜை செய்யப்பட்டது. பின், சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு, வடம் பிடிக்கப்பட்டது. வெயில் கொளுத்தியதையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு ரத வீதியில் துவங்கி, மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதி என, நான்கு ரத வீதிகளிலும் சிறிய தேர், நடைபழகும் குழந்தையை போல், ஆடி அசைந்து வந்த அழகை, பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர். மதியம், 2:55க்கு, நிலையை அடைந்தது. இதற்காக, நான்கு மணி நேரம் வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. அறிவுச்சுடர் அறக்கட்டளை, திருநீலகண்ட நாயனார் அன்னதான குழு, கோவம்ச அறக்கட்டளை, கங்கவர் திருமண மண்டப அறக்கட்டளை, செல்லாண்டியம்மன், அழகு நாச்சியம்மன் அன்னதான குழு ஆகியன சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பில் குடிநீர் பாக்கெட், நீர், மோர், ஜூஸ் வழங்கப்பட்டது. தேருக்கு பின், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் ஆகிய பரிவார மூர்த்திகளின் தேர்களும் வலம் வந்தன. இவற்றை, சிறுவர், சிறுமியர் இழுத்தனர். தேர் நிலையை அடைந்தபின், தேரடியில் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்டித்தாரை நிகழ்வு நடந்தது. இன்று மாலை, 6:30க்கு தெப்போற்சவம்; நாளை நடராஜர் தரிசன காட்சி, கொடியிறக்கம்; நாளை மறுநாள், மஞ்சள் நீர் விழா, இரவு மயில் வாகன காட்சி நடைபெறும்.