உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவராக சுவாமி கோவிலில் தேர்த் திருவிழா கோலாகலம்!

பூவராக சுவாமி கோவிலில் தேர்த் திருவிழா கோலாகலம்!

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில்  தேரோட்டத்தில்  ஏராளமான பக்தர்கள்  பங்கேற்று, தேர் இழுத்தனர். கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா, கடந்த 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாள் விழாவான நேற்று, நகர வர்த்தக நலச் சங்கம் சார்பில், தேர்த்திருவிழா நடந்தது. அதிகாலையில், பூவராக சுவாமி, அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 6:30 மணிக்கு, உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீ தேவி, பூமிதேவியோடு திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. விழாவில் நகர வர்த்தக நலச் சங்கம், லயன்ஸ் கிளப், ஜேசீஸ் உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. நாளை (22ம் தேதி) மதியம், மட்டையடி உற்சவமும், இரவு 10:00 மணிக்கு, தெப்பல் உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !