உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னிச்சட்டி ஏந்தி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன்!

அக்னிச்சட்டி ஏந்தி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன்!

கோவை: சித்திரை திருவிழாவையொட்டி, அலகு குத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கணபதி ஆர்.கே.நகர் பகுதியிலுள்ளது, சர்வசக்தி மாரியம்மன் கோவில், கடந்த, 15 நாட்களுக்கு முன், சித்திரை திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பூச்சாட்டு, மூன்று கம்பம் போடுதல், திருவிளக்கு வழிபாடு, சக்திக்கரம் எடுத்தல், அம்மன் அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.  நேற்று, அக்கினிச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அலகு குத்துதல் மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன.  நேர்த்திக்கடன் செலுத்தும் ஊர்வலம், கணபதி ராஜிவ்காந்தி நகரில் துவங்கியது. எட்வின்நகர், பாலாஜி லே–அவுட் வழியாக, சுப்பம்மாள் நகரை கடந்து, நியூமுல்லை நகரை அடைந்தது.  அங்கிருந்து  ஆர்.கே.நகர் கோவிலை அடைந்தது.  ஊர்வலத்தில் தாரை தப்பட்டை, உடுக்கை உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் ஒலிக்க ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. 4 அடி அகலம்,  13 அடி நீளம் கொண்ட குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள்நீர் உற்சவமும், மாலை அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கின்றன. நாளை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !