மாரியம்மன் விழா பந்தல் அகற்றும் பணி: இரவில் வைத்து கொள்ள வேண்டுகோள்
ஈரோடு: மாரியம்மன் விழா பந்தல் அகற்றும் பணியை, இரவில் வைத்துக் கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த மாதம் நடந்தது. விழாவுக்காக மாரியம்மன் கோவில் வளாகம் முதல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை சாலையின் இரு பகுதிகளையும், உள்ளடக்கி வாகனங்கள் செல்லும் வகையில் பிரமாண்டமான தகர சீட் இரும்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழா முடிந்து தற்போது பந்தல் அகற்றும் பணி ஒரு வாரமாக நடக்கிறது. தகர சீட்கள் அகற்றப்பட்டு, சாலையின் மையப்பகுதியில், 40 அடி உயரத்தில் உள்ள இரும்பு பிரேம்களை பிரித்து எடுக்கும் பணி நேற்று நடந்தது. இதில், கிரேனில் ஏறி ஆபத்தான முறையில், பணியாளர் ஒருவர் இரும்பு பிரேம்களை, கழற்றி கொண்டிருத்தார். வாகன போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. மக்கள் கடந்து சென்று கொண்டிருந்தனர். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருத்கும் இரும்பு பிரேம்களின், நட்டுகளை கழற்றும் போது, இரும்பு பிரேம்கள் தவறி விழவும், மொத்தமும் சரிந்து விழவும் வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்து இல்லாத, இரவு நேரத்தில் பணிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.