ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை
மேல்மருவத்துார்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், இயற்கைச் சீற்றங்கள் தணிந்து, இயற்கை வளம் பெருகிட, சித்திரைப் பவுர்ணமி விழாவில், 1,008 யாக குண்டங்கள் அமைத்து, கலச விளக்கு வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்திரைப் பவுர்ணமி விழா, நேற்று காலை, 3:30 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆதிபராசக்தி கருவறையின் முன் உள்ள பிரகாரத்தில், பிரதான யாக குண்டத்தில், கற்பூரம் ஏற்றி வைத்து, வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். அனைத்து மக்களும், மன வளம், மனித வளம், தொழில் வளம், தெய்வ பக்தி பெறவும், இயற்கை சீற்றங்கள் தணிந்து, இயற்கை வளம் பெருகிடவும் அன்னை ஆதிபராசக்தியை வேண்டி, சங்கல்பம் செய்து, வேள்வி நடத்தப்பட்டது. பூஜையில், ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன், தமிழக அரசு தேர்வாணையத் தலைவர் அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் செய்திருந்தினர்.