உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்: தீர்த்தவாரி உற்சவத்தில் குளிர்ந்தார்!

மதுரை வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்: தீர்த்தவாரி உற்சவத்தில் குளிர்ந்தார்!

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வாக நேற்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் காலை 6.05 மணிக்கு அவர் இறங்கியதும் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது.

சைவமும், வைணவமும் இணையும் வகையில் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 17 ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,18ல் திக்கு விஜயம், ஏப்.,19ல் திருக்கல்யாணம், ஏப்.,20 ல் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் தீர்த்தவாரியுடன் விழா முடிந்தது. அழகர்கோவில் சித்திரை திருவிழா, தல்லாகுளம் பெருமள் கோயிலில் ஏப்.,7ல் துவங்கியது. வைகை ஆற்றில் இறங்குவதற்காக ஏப்.,20 இரவு 7.45 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.

எதிர்சேவை: பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழி நேற்று முன்தினம் காலை 7.00 மணிக்கு மதுரை மூன்றுமாவடி வந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.00 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் வந்தார். அங்கு திருமஞ்சனம் ஆகி, ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பச்சைப்பட்டுடன் அருள்பாலித்தார். நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பாடாகி, 2.30 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.

வைகை ஆற்றில் அழகர்: தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளழகரை பக்தர்கள் குளிர்விக்க, அங்கிருந்து அதிகாலை 3.00 மணிக்கு வைகையை நோக்கி புறப்பட்டார். 5.30 மணிக்கு வைகையின் முகப்பில் அவர் காத்திருந்தார். காலை 5.50 மணிக்கு புறப்பாடாகி, பக்தர்கள் வெள்ளத்தில் தங்கக்குதிரையில் மிதந்து வந்தார். வைகை ஆற்றில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி இருந்த வீரராகவப் பெருமாள், தங்கக்குதிரையில் வந்த கள்ளழகரை வரவேற்றார். காலை 6.05 மணிக்கு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். பின், வீரராகவப் பெருமாளும், கள்ளழகரும் பரஸ்பரம் மூன்று முறைவலம் வந்தனர். தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் சர்க்கரை தீபம், மாவிளக்கு தீபங்கள் ஏற்றியும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

தீர்த்தவாரி: ஆற்றில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்ட கள்ளழகர், ௧1.00 மணிக்கு ராமராயர் மண்டபம் வந்தார். தண்ணீரை பீய்ச்சியடித்து அழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. ராமராயர் மண்டபத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு புறப்பாடாகி, இரவு 10.00 மணிக்கு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயில் சென்றடைந்தார். இன்று காலை 6.00 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகி, காலை 11.00 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனுார் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின், கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். கள்ளழகர் கோவில் தக்கார் வெங்கடாஜலம், செயல் அலுவலர் செல்லத்துரை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மாட்டு வண்டி உண்டியல்:

*ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.l ஏ.வி., மேம்பாலத்தில் வி.ஐ.பி.,க்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கல்பாலம், உயர்மட்ட பாலம், வைகை ஆற்றுக்குள் என பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
* கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி கள்ளழகர் மீதும், பக்தர்கள் மீதும் பீய்ச்சியடித்து குளிர்வித்தனர்.l தல்லாகுளம், கோரிப்பாளையம், பனகல்ரோடு, ஆற்றின் கரைகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், கட்டக்கால் ஆட்டம் ஆடி பக்தர்கள் பரவசமடைந்தனர்.
*அரசு மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.l தங்கக்குதிரை வாகனத்துடன் கள்ளழகரை துாக்கி வந்த பக்தர்களை பரவசப்படுத்திய சீர்பாதங்கள் பாராட்டப்பட்டனர்.l அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் கோயில் சார்பில் உண்டியல்கள் எடுத்து வரப்பட்டன.l ஆற்றில் இடம் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் இரவே, பக்தர்கள் ஆற்றுக்குள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.l கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், துணை கமிஷனர் கங்காதர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !